துருக்கியில் முறையான மருத்துவ காரணங்கள் இன்றி அதிக அளவில் அறுவை சிகிச்சை பிரசவங்களை மேற்கொண்டதற்காக 100க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இந்த மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கம் செய்து கட்டாய மறு பயிற்சி பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ காரணங்கள் இல்லாமல் தனியார் மருத்துவமனைகள் திட்டமிட்ட சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துருக்கியில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு தரவுகளின் படி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 32 நாடுகளிலேயே துருக்கியில் தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் அதிகமாக காணப்படுக்கின்றது.
அங்கு நடக்கும் ஒவ்வொரு ஆயிரம் பிரசவங்களில் சுமார் 615 பிரசவங்கள் சிசேரியன் முறையில் செய்யப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் 6க்கும் மேற்பட்டவை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.
இந்நிலையில் இந்த சிசேரியன் பிரசவங்களின் விகிதத்தை குறைப்பதற்கான முயற்சிகளில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
இது பற்றி மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரசின் கட்டாய மறு பயிற்சிக்கு துருக்கியின் மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுகப்பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகலாம், ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 30 நிமிடங்களை போதும் என்பதனால் கால விரயம் தவிர்க்கப்படுகிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பிரசவகால சிக்கல்களால் ஏற்படும் சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே அறுவை சிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்படுவதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அது மாத்திரம் இன்றி மருத்துவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டும் நாடு சிசேரியன் பிரசவங்களை சார்ந்து இருப்பதற்கான அடிப்படை காரணங்களை தவிர்க்க முடியாது எனவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் மகப்பேறு பராமரிப்பு பணியாளர் நியமனம் மற்றும் நோயாளிகளுக்கான ஆதரவு போன்றவற்றில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.
