ஐ.பி.எல் 2026 தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் களமிறங்குவது மிகவும் கடினம் என இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கால் தசைநார் காயம் காரணமாக இந்த தொடரின் ஆரம்பப் போட்டிகளில் இருந்து தோனி நீக்கப்பட்டிருந்தார்.
மார்ச் மாதம் முதல் அவர் சி.எஸ்.கே அணியுடன் தங்கியிருந்து, வலைப்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தாலும், இதுவரை அவர் ஒரு போட்டியில் கூடஅவர் விளையாடவில்லை.
தற்போது சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வெற்றிபெற்றால் மாத்திரமே அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இது குறித்து தனது யூடியூப் தளத்தில் கருத்து வெளியிட்ட அஸ்வின் ,
“தோனி மீண்டும் அணிக்குள் வந்தால், அது அணியின் சமநிலையை மாற்றிவிடும். அது மிகவும் சிக்கலானது என்பதால் அவர் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
ஒருவேளை சி.எஸ்.கே அணி அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்று, பிளே-ஓப் வாய்ப்பை இழந்தால் மாத்திரமே, சென்னையில் நடைபெறவுள்ள போட்டியில் தோனிக்கு ஒரு பிரியாவிடைப் போட்டி வழங்கப்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அன்கேப்ட் வீரராக 4 கோடி ரூபாவிற்குத் தக்கவைக்கப்பட்ட தோனி, 2026 தொடரிலும் அதே ஊதியத்தில் தக்கவைக்கப்பட்டார்.
2025 தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய தோனி, 196 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
மைக்கேல் ஹசியின் கருத்து: தோனி ஏன் போட்டிகளைக் காண மைதானத்திற்கு வரவில்லை என்பது குறித்து சி.எஸ்.கே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கேல் ஹசி விளக்குகையில், “தோனி ஒரு சிறந்த குழு வீரர். அவர் மைதானத்திற்கு வந்தால் கமெராக்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பி, விளையாடும் வீரர்களுக்கு அது ஒரு கவனச்சிதறலாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.
சென்னை அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தோனியின் பிரியாவிடை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
