மட்டக்களப்பு நகரில் மனித பாவனைக்கு உதவாத உணவை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நிர்வாக நடத்துனரை விளக்கமறியலில் வைக்குமாறும், உணவகத்தை எதிர்வரும் 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறும், இன்று (26) செவ்வாய்க்கிழமை மட்டு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.
நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அருகாமையிலுள்ள உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்து வருவதாக குறித்த உணவகத்துக்கு எதிராக கடந்த 22 ம் திகதி வெள்ளிக்கிழமை பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை களஞ்சியபடுத்தியமை, உணவு பொருட்களை உற்பத்தி செய்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவகத்தை நடாத்தி சென்றமை, கழிவு நீரை திறமையான முறையில் வெளியேற்றாமை, உணவு கையாளும் இடப்பரப்பில் தொற்று ஏற்படக்கூடிய விதத்தில் விலங்கு (பூணை) தென்பட்டமை மற்றும் மூடி இடப்படாத கழிவு தொட்டிகள் இருப்பது போன்ற பல குற்றச்சாட்டுக்களை பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் குறைபடுகளை திருத்தம் செய்யும் வரை 14 நாட்களுக்கு உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு கட்டளை பிறப்பித்ததுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிர்வாக நடத்துனரை பிணையில் செல்ல அனுமதிருந்தார்.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவகத்தை மூடி நீதிமன்ற கட்டளையை ஒட்டினர்.
