கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வரை காணப்படும்.
எனினும், திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீட்டர் (kmph) வரை அதிகரிக்கக்கூடும். இதனால் இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவிற்கு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 – 2.5 மீற்றர் உயரத்திற்கு எழும்பக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இக்கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
