எத்தியோப்பியா- வடக்கு அம்ஹாரா பிராந்தியத்தில் இடம்பெற்ற பயங்கர பேருந்து விபத்தில் , குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) திங்கட்கிழமை அதிகாலை வேளையில், டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி அதிகளவிலான பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக கொம்போல்சா நகர நிர்வாகப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ்கள் இல்லாததால், பயணிகள் அனைவரும் அங்கு வந்த சாதாரண பொது வாகனங்கள் மூலமே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாமதமே பலரது உயிரிழப்புக்குக் காரணமாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விபத்து நேரிட்ட வீதியானது மலைப்பாங்கான வளைவுகளைக் கொண்ட ஒரு பகுதி என்பதுடன், அது பொதுவாகவே மிகவும் ஆபத்தான ஒரு பாதையாக அறியப்படுகிறது. வி
முன்னதாக, கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் எதியோப்பியாவின் தெற்கு சிடாமா பிராந்தியத்தில் இதேபோன்றதொரு பேருந்து நதியினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
