பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனத் தங்களை அறிமுகப்படுத்தி பணம் கோரும் மோசடி நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று, அதிகாரப்பூர்வ கடமைகளை முன்னிட்டு பணம் வசூலிக்கும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் டெங்கு பரவல் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, வீட்டு பரிசோதனைகள் என்ற பெயரில் சிலர் பணம் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களது சேவைகளுக்காக எந்தவிதமான கட்டணமோ பணமோ வசூலிப்பதில்லை என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி யாரேனும் பணம் கோரினால் அவர்களுக்கு பணம் வழங்க வேண்டாமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
