கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட, மன்னார் 50 மெகாவாட் (MW) காற்றாலை மின்நிலையத்தின் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்ட விண்ட் டர்பைன்கள் (காற்றாலை விசிறிகள்) சில வாரங்களுக்கு முன்பு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ஏனைய அனைத்து உபகரணங்களும் தற்போது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த மின்நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு அலகு (Unit) 0.0465 அமெரிக்க டொலர் (சுமார் 14.37 இலங்கை ரூபா) என்ற விலைக்கு கொள்வனவு செய்யப்பட ஒப்பந்தமாகியுள்ளது. இது இலங்கையின் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையாகும்.
இத்திட்டம் தேசிய மின் கட்டமைப்போடு இணைக்கப்பட்ட பின், புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) இறக்குமதி குறைக்கப்படுவதால் நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபா வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும்.
மின்சக்தி அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டமைப்பு ஆபரேட்டர் நிறுவனம் (National System Operator – NSO) இதன் கட்டமைப்பு கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தையும் மேற்கொள்ளவுள்ளது.
தேசிய மின் தேவையில் 70 வீதத்தை மறுசீரமைக்கத்தக்க சக்தி வளங்கள் (Renewable Energy) மூலம் பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் இலக்கை நோக்கிய முக்கிய ஆரம்பப் படியாக இந்த மன்னார் காற்றாலை மின்நிலையம் அமையும். அத்துடன், 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை அடைய எதிர்பார்க்கும் ‘பூச்சிய கார்பன் உமிழ்வு’ (Net-Zero Carbon Emission) இலக்கிற்கும் இது பங்களிப்பு வழங்கும்.
