கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து ஆரையம்பதி நோக்கி காஞ்சிரம்குடா வாவி வழியாக மீன்பிடித் தோணியில் கசிப்பு கடத்த முயன்ற 60 வயதுடைய நபர் ஒருவர், 150 லீற்றர் கசிப்புடன் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேனுஜன் தலைமையில் பொலிஸார் மற்றும் விசேட புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் காஞ்சிரம்குடா வாவியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் ஆரையம்பதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடித் தோணியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
