ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகளில் பெரும்பாலான இலங்கையர்கள் திருப்தியடைந்துள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை மாற்று மையத்தின் (CPA) சமூக குறிகாட்டி பிரிவு வெளியிட்ட ஜனநாயக ஆட்சி மீதான நம்பிக்கை குறியீட்டு ஆய்வில், 75.5 வீதமானோர் ஜனாதிபதியின் செயற்பாடுகளில் திருப்தி தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் தொடர்பில் 29.4 வீதமானோர் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு 64.1 வீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 23.6 வீதமானோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 40.5 வீதமானோர் நீக்கம் அவசியமானது என்றாலும் அது உடனடி முன்னுரிமை அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்களது குடும்ப பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக 51.4 வீதமானோர் குறிப்பிட்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு 45.3 வீதமானோர் திருப்தியும், 44 வீதமானோர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திறமையான நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் 62.8 வீதமானோர் திருப்தி தெரிவித்துள்ளதுடன், டிட்வா புயலுக்குப் பின்னரான நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் 68.6 வீதமானோர் திருப்தி தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்து 51.6 வீதமானோர் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு 2026 மே 23 முதல் ஜூன் 18 வரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 1,240 பேரிடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
