இன்று (20) முதல் முட்டைகளின் சில்லறை விலை உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ.41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் மக்காச்சோள இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாக கோழித் தீவனத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி தேவையை பூர்த்தி செய்யாததால், அரிசி உள்ளிட்ட மாற்று தீவனங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கோழிகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டு முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சில வர்த்தகர்கள் தீவனத்தில் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளை கலப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், இதனால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து உற்பத்தியாளர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
