16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடுவது, கருத்து தெரிவிப்பது மற்றும் பதிவுகளுக்கு எதிர்வினையாற்றுவது ஆகியவற்றைத் தடை செய்யும் புதிய சட்டத்தை வியட்நாம் அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்டுள்ள வரைவு உத்தரவின்படி, 16 வயதிற்குட்பட்டோரின் சமூக ஊடகக் கணக்குகள் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் தகவல்களைப் பயன்படுத்தியே பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அவர்கள் பார்க்கும் உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை கண்காணிக்கும் பொறுப்பும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கே வழங்கப்படவுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சிறுவர் பயனர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வயதுக்கு ஏற்ற உள்ளடக்கங்கள் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வரைவு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், வியட்நாம் கலாசார துணை அமைச்சர் பான் டாம், சிறுவர்களை சமூக ஊடகங்களில் இருந்து முழுமையாகத் தடை செய்வது அரசின் நோக்கம் அல்ல என்றும், அவர்கள் வயதுக்கு ஏற்ற பாதுகாப்பான இணையச் சூழலில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுக்கு உயர்ந்த அளவிலான தனியுரிமை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், வன்முறை, ஆபாசம், சூதாட்டம், போதைப்பொருள், தற்கொலை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை சமூக ஊடக நிறுவனங்கள் தாமாகவே கண்டறிந்து எச்சரிக்கை விடுத்து, அவற்றை அணுகுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வரைவு உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், 16 வயதிற்குட்பட்டோரின் ஒன்லைன் விளையாட்டு பயன்பாட்டுக்கும் புதிய கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
விளையாட்டு சேவை வழங்குநர்கள் பயனர்களின் வயதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மேலும், 16 வயதிற்குட்பட்டோர் ஒரே நிறுவனத்தின் ஒன்லைன் விளையாட்டுகளை ஒரு நாளுக்கு அதிகபட்சம் 60 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் மனநலன் தொடர்பாக உலக நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 15 வயதிற்குட்பட்டோரின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதுடன், சமூக ஊடக வயது வரம்பை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடாக அவுஸ்திரேலியாவும் திகழ்கிறது.
எனினும், வியட்நாமின் இந்த வரைவு உத்தரவு இன்னும் இறுதிப்படுத்தப்படாத நிலையில், அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
