கதிர்காமம் நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற கார், செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
