ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பொறுப்பேற்கப்பட்டு விடுவிக்கப்படாத சுமார் 1,025 வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விலைமனுக்கோரல் முறையில் விற்பனை செய்வதற்கு சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவற்றில் சுமார் 625 வாகனங்கள் துறைமுகத்தை வந்தடைந்து 6 மாதங்களுக்கும் அதிகமான காலம் கடந்துள்ளதாகச் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்கள் எந்தவிதமான சுங்க விதிமீறல்களுக்கும் உட்பட்டவை அல்ல என்றும், இறக்குமதியாளர்கள் அவற்றை உரிய காலத்தில் விடுவிக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கோ அல்லது விலைமனுக்கோரல் நடைமுறை மூலம் விற்பனை செய்வதற்கோ உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
“இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும், அதற்குரிய வரிகள் மற்றும் கட்டணங்கள் செலுத்தப்பட்ட திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், அரசிற்குச் சேர வேண்டிய வரிகளை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, அப்பொருட்களை ஏலத்தில் விட்டு விற்பனை செய்யச் சட்டத்தில் இடமுண்டு.”
ஏலம் அல்லது விலைமனுக்கோரல் மூலம் பெறப்படும் தொகையிலிருந்து முதலில் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகள் அறவிடப்படும்.
எஞ்சிய தொகையிலிருந்து துறைமுக மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டணங்கள் ஈடுசெய்யப்படும்.
அதன் பின்னரும் எஞ்சும் மீதிப் பணம் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி அளிக்கப்படும்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கு மேல் விடுவிக்கப்படாமல் இருந்தால், அது குறித்து இலங்கை சுங்கத்திணைக்களத்திற்கு தெரியப்படுத்துவது துறைமுக அதிகாரசபையின் பொறுப்பாகும்.
அதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள இந்த வாகனங்கள் தொடர்பில் துறைமுக அதிகாரசபையினால் சுங்கத்திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான நியாயமான காரணங்களை இறக்குமதியாளர்கள் முன்வைக்கும் பட்சத்தில், அது குறித்து தனித்தனியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
