யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகையினால் அந்தப் பகுதி மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம் – கிரி மலை வீதிகளில், 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்பு கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள் உருவாகியுள்ளன.
அவற்றுக்குள் குப்பைகளைக் கொட்டி சுகாதார “நில நிரவுகைத் திட்டம்” என குழிகளை மூடும் நடவடிக்கை 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் உருவான நிலையில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.
இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அந்த குழிகளுக்குள் குப்பைகள் கொட்ட அனுமதிக்கப்படவில்லை எனவும், கொட்டப்பட்ட குப்பைகளை மீள அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமது சபை தீர்மானத்தையும் மீறி வலி. தெற்கிலிருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக வலி. வடக்கு பிரதேச சபையின் சுகாதாரக் குழுவினருக்கு தகவல் கிடைத்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை அப்பகுதிக்கு சென்றபோது, அங்கு கடற்படையினர் குப்பைகளை கொட்டுவதற்கு வந்திருந்த வேளை திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த பகுதிக்கு நேற்றையதினம் (28) செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது. குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் அந்த பகுதி மக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
