தலைமை நீதியரசரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துகள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்பதால், அவை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி ஜகத் அபேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
BASL தலைவருக்கு எழுதிய கடிதத்தில், பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி தலைமை நீதியரசரை இலக்கு வைத்து சில கருத்துகள் வெளியிடப்பட்டமை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தற்போதைய தலைமை நீதியரசரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்காக கொண்டுவரப்படுவதாக சிலர் கூறுவது பொதுமக்களையும் மகா சங்கத்தினரையும் தவறாக வழிநடத்துவதாக ஜகத் அபேநாயக்க தெரிவித்துள்ளார்.
தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளியிடப்படும் அவதூறான அல்லது அரசியல் நோக்கமுடைய கருத்துகளுக்கு எதிராக BASL நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் மௌனம் அந்தக் கருத்துகளை ஆதரிப்பதாக பொதுமக்கள் கருதும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் தொழில்முறை ரீதியாக BASL செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
