சுமார் ரூ.9 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கை கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த 10ஆம் திகதி சிலாபம் – தட்சுறு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கடல் வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,302 கிலோகிராமுக்கும் அதிகமான (ஈர எடை) பீடி இலைகள் மற்றும் 2 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், 60 சோப்புக் கட்டிகள் அடங்கிய பெட்டியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மொத்த பெறுமதி ரூ.9 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சோப்புகள் மற்றும் இரண்டு டிங்கி படகுகள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கிரிபத்கொட/பியகம சுங்கத் திணைக்களத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தொடர்ந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
