கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் இன்று (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்
