இலங்கை மகாவலி அமைப்பிற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தற்பொழுது திருப்திகரமான நிலையில் காணப்பட்டாலும், பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பித்து, சிறுபோக நடவடிக்கைகளை எதிர்வரும் 2027 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன் ஆரம்பிக்க வேண்டும் என்று இலங்கை மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ செயலகப் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில், நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மகாவலி அமைப்பிற்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களில் 54 சதவீத நீரும், வளவை அமைப்பில் சுமார் 57 சதவீத நீரும் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது ஒரு கணிசமான நீர் மட்டமாகக் கருதப்பட்டாலும், எதிர்காலப் பருவநிலை மாற்றங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் உலர் வலயப் பிரதேசங்களுக்குப் போதுமான மழைவீழ்ச்சி கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சவாலைச் சமாளிப்பதற்காக, விவசாயிகள் மற்றும் உரிய தரப்பினர் பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் பெருமளவு நீரைச் சேமிக்க முடியும், இதன் தொடர்ச்சியாக அடுத்த சிறுபோக நடவடிக்கைகளை எதிர்வரும் 2027 மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்பாகவோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திற்குள்ளாகவோ வெற்றிகரமாகத் தொடங்கிவிடலாம். இந்தத் திட்டமிடலைச் சரியாகப் பின்பற்றினால், எதிர்வரும் இரண்டு போக விவசாய நடவடிக்கைகளையும் எந்தவிதத் தடையோ அல்லது நீர்ப்பற்றாக்குறையோ இன்றி மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும்.
