பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விசேட குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசக் காட்சிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களைப் பணத்திற்காக விற்பனை செய்யும் இணையவழி கடத்தல் கும்பல் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் சம்பவங்கள் குறித்து அமைச்சு முழுமையான கவனம் செலுத்தியுள்ளதுடன், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
முதற்கட்டத் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்காக இச் சம்பவம் இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பேரிடர் காப்பீட்டை வாங்கு
போலியான கணக்குகளைப் பயன்படுத்தி, தமது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையே இக் குழுக்களில் விற்பனை செய்ய முயற்சிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்தே இயக்கப்பட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமது குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிற்குள்ளேயே இவ்வாறான பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் காணப்படுவதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக வலைத்தளப் பயன்பாடு மற்றும் அவர்களின் நண்பர்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குடும்பத்தில் எவரேனும் இவ்வாறான கடத்தலில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது அதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், அவர்களை உடனடியாக உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் இருந்து பாதுகாப்பைப் பெறவும், சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ளவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பின்வரும் கட்டணமில்லா உதவி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:
1938 (பெண்கள் உதவிச் சேவை)
1929 (சிறுவர் உதவிச் சேவை)
மேலும், ஆபத்தான நிலைமை குறித்துப் பயனாளர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் பலர் இணையத்தில் விழிப்புணர்வுப் பதிவுகளையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
