நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்துச் வரப்பட்டு, ஆற்றுப் படுகைகளில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உடல்களை அடக்கம் செய்யும் பணிகளைச் சித்வான் மாவட்ட அதிகாரிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களைப் பின்னர் அடையாளம் காணும் நோக்கில், உடல்களிலிருந்து மரபணு மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து வருவதுடன், அவற்றை உறவினர்களின் மரபணு மாதிரிகளுடன் பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 272 உடல்களில் சுமார் 200 உடல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள உடல்களை அடக்கம் செய்யும் பணிகள் இன்று நிறைவடையும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளதாகச் அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
ஒவ்வொரு அடக்கமும் முறையாக ஆவணப்படுத்தப்படும் எனத் தெரிவித்த காவல்துறையினர், அடக்கம் செய்யப்படும் இடத்தில் வரிசை எண்கள் குறிக்கப்படுவதுடன், மரபணு மாதிரிகள், பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஏனைய அடையாள விபரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
