நாட்டிலுள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மைத்துவத்துடன் அரச-தனியார் பங்களிப்பின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு புகையிரத பாதையில் கல்ஓயா மற்றும் பொலன்னறுவை புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஹிங்குராக்கொடை புகையிரத நிலையம், குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வந்ததுடன், கடந்த 45 வருடங்களாக எவ்வித அபிவிருத்தியும் காணப்படாத நிலையிலிருந்தது.
பயணிகள் போக்குவரத்து மட்டுமன்றி, பல்வேறு விவசாய உற்பத்திகளைப் பெருமளவில் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படும் இப் புகையிரத நிலையம், 40 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்படவுள்ளது.
