பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் பொலிஸ் நற்சான்றிதழ்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கணினித் தொகுதி தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் நற்சான்றிதழ் பிரிவின் ஊடாகவே இச் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தற்காலிக நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணினித் தொகுதி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் பின்வரும் தற்காலிக நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
http://www.police.lkஎன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று ‘Download Application’ என்பதன் ஊடாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தைத் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் நிழற்படங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பிய பின்னர், பின்னணி அறிக்கைகளை அழைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை பொலிஸ் நற்சான்றிதழ் பிரிவு முன்னெடுக்கும். இக் கட்டத்தில் பொதுமக்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
எனினும், கணினித் தொகுதி சீரமைக்கப்பட்ட உடனடியாக, இத் தற்காலிக முறையில் விண்ணப்பித்த அனைவரும் முன்னர்போல் உரிய கட்டணங்களைச் செலுத்தி, இணையவழி முறைமையினூடாக மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களில் சான்றிதழ்களைப் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் குறிப்பு இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அக் குறிப்பு இலக்கங்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் பத்தரமுல்ல, சுஹுருபாய 17 ஆம் மாடியிலுள்ள பொலிஸ் சான்றிதழ் பிரிவுக்குச் சென்று தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது).
குறிப்பு இலக்கங்கள் இணையத்தளத்தில் வெளியாகாத விண்ணப்பதாரர்களுக்குக் கணினித் தொகுதி சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தற்போது அக் கணினித் தொகுதியை விரைவாகச் சீரமைப்பதற்கான தொழில்நுட்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அது இயல்பு நிலைக்குத் திரும்பியதும் பொதுமக்கள் மீண்டும் முறைப்படி அறிவிக்கப்படுவர் எனப் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
