இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் இணைந்து நடத்தும் “Colombo Marathon – 2026” சர்வதேச மரத்தன் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (13) காலை 06.00 மணிக்கு கொழும்பு பாலதஷ மாவத்தை ஹெலிபேட் பகுதிக்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.
இதனையொட்டி கொழும்பின் பல முக்கிய வீதிகளில் போக்குவரத்துப் பாதைகள் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், விசேட போக்குவரத்துத் திட்டமும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலதஷ மாவத்தையில் ஆரம்பமாகும் முழுமையான மரத்தன் போட்டி , காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி செயிண்ட் மைக்கேல் சந்தி, மெரைன் டிரைவ் , பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை வழியாக தெஹிவளை மக்கள் வங்கி வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தள சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பெரஹர மாவத்தை, ரொடுண்டா சுற்றுவட்டம், உத்தரானந்த மாவத்தை வழியாக இரு சுற்றுகளாக நிறைவடையும்.
NSA சுற்றுவட்டத்திலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், செராமிக் சந்தியிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொம்பனித்தெரு மேம்பாலம் அல்லது ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பித்தள சந்தி வழியே பயணிக்கலாம்.
மெரைன் டிரைவ் பாதை (காலை 06.00 – 10.00 மணி வரை): தெஹிவளையிலிருந்து மெரைன் டிரைவ் பகுதிக்குள் வாகனங்கள் நுழைவது தடைசெய்யப்பட்டு காலி வீதிக்குத் திருப்பி விடப்படும். கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து மெரைன் டிரைவ் பகுதிக்கு நுழைவதும் கட்டுப்படுத்தப்படும்.
மெரைன் டிரைவ் பகுதியைச் சுற்றியுள்ள வாகனங்கள், காலி வீதியையும் மெரைன் டிரைவையும் இணைக்கும் இடைப்பட்ட பக்கவாட்டுச் சாலைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
175 மற்றும் 177 ஆகிய பேருந்து பாதைகளின் சேவைகள் இக் காலப்பகுதியில் காலி வீதியின் 19 ஆவது குறுக்குத் தெரு வரை மட்டுமே இயக்கப்படும்.
கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட முக்கிய சந்திகளில் போட்டி நடைபெறும் நேரத்திற்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து தற்காலிகமாகச் சீரமைக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
