யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அடாவடித்தனமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அதனை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவக் கோரியும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கு உப தலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி அறிவித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
நல்லூர் பகுதியில் தமிழ் மக்களால் புனிதமாகப் பூஜிக்கப்பட்டு, சனிக்கிழமை (26) அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபன் அவர்களின் உருவச்சிலையை, இன்று ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை பொலிஸார் அடாவடித்தனமாக அகற்றிக் கொண்டு சென்றுள்ளனர். தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கங்களின் இனவாதப் போக்கையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.
தென்னிலங்கை இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறான கோர முகத்தை அரசு காட்டுகின்றது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை அகற்றியிருப்பது, இந்நாட்டில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதையே காட்டுகிறது.
இதனைக் கண்டித்து, நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம்:
யாழ்ப்பாணம்: நல்லூர் அடியில் திலீபனின் சிலை அமைந்திருந்த இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும்.
திருகோணமலை: சிவன் கோவில் அடியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.கிளிநொச்சி: கந்தசுவாமி கோவில் அடியில் தொடங்கி கச்சேரி வரை கண்டனப் பேரணி நடைபெறும்.அம்பாறை: தம்பிலுவில் மத்திய சந்தையில் தொடங்கி மணிக்கூட்டுக் கோபுரம் வரை பேரணி இடம்பெறும். மன்னார்: தந்தை செல்வா நினைவுத் தூபி அடியில் போராட்டம் நடைபெறும்.வவுனியா: பொங்குதமிழ் நினைவுத் தூபி அடியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை பேரணி செல்லும்.
மட்டக்களப்பு: தந்தை செல்வா நினைவுத் தூபியடியில் தொடங்கி காந்தி பூங்கா வரை பேரணி முன்னெடுக்கப்படும்.
அவசரத் தேவையின் நிமித்தம் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இதனை ஒரு பொது அழைப்பாக ஏற்று மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும்.
அகற்றப்பட்ட திலீபனின் சிலை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும். சிலை அகற்றப்பட்டதற்கான பின்னணி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். எமது வரலாற்றுச் சின்னங்களையும் நினைவேந்தல் உரிமைகளையும் எவராலும் அழிக்க முடியாது.
இதன்போது வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கபட்டோர் சங்கத்தின் அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
27 செப்டம்பர் 2026 நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபன் அவர்களது உருவச்சிலையை பொலிசார் அகற்றியமைக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தென்னிலங்கை இனவாத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியல் போக்கின் காரணமாக தமிழர்கள் இனமாக, நிலம், வரலாறு மற்றும் உரிமைகள் தொடர்ந்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்ற அரசியல் கணக்குக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.
அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் விகாரைகள், புத்தர் சிலைகள் மற்றும் போர் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழி போராடி உயிர்நீத்த திலீபனின் சிலை அகற்றப்பட்டிருப்பது சட்டத்தின் சமத்துவமான நடைமுறை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. நினைவுச் சின்னங்கள் தொடர்பில் இன மத பேதமின்றி ஒரே சட்ட அளவுகோல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் இங்கு நடப்பதோ இன அழிப்பின் ஒரு பகுதியே ஆகும். அதனாலேயே நாம் சர்வதேச நீதி பொறிமுறையை கோருகின்றோம். சிலை அகற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அல்லது புலனாய்வு தலையீடு இருப்பதாக தமிழ் மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே சிலையை அகற்ற உத்தரவிட்டது யார்? எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் பின்னணி என்ன என்பவற்றை வெளிப்படுத்தும் சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். கடந்த பல சதாப்தங்களாக ஆட்சிக்கு வந்த அரசுகள் மாறினாலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நினைவேந்தல் உரிமை மற்றும் நீதி கோரிக்கைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் உள்ளன.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்கள் மட்டும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எமது கோரிக்கைகள்: தியாகி திலீபன் அவர்களது சிலை அகற்றப்பட்ட அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும். சிலை அகற்றப்பட்டதற்கான சட்டம் மற்றும் நிர்வாக காரணங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். சம்பவம் தொடர்பில் விசாரணையும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களின் நினைவேந்தல், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து வெளிப்பாடு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இது ஒரு சிலையை பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. ஒரு மக்களின் வரலாறு, நினைவு மற்றும் உரிமையை மதிப்பது தொடர்பான பிரச்சனையாகும். எனவே அரசியல் கட்சிகள், பிரதேசம் மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தமிழர்களும் ஜனநாயகம் மற்றும் அகிம்சை வழியில் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழ் மக்களின் வரலாறு, நினைவு மற்றும் உரிமைகள் எந்த அரசியல் அழுத்தத்திற்காகவும் பலியிடப்படக்கூடாது.
திலீபனின் சிலையை அகற்றிய நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், அகற்றப்பட்ட அதே இடத்தில் சிலை மீள நிறுவப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம். இது ஒரு சிலைக்கான போராட்டம் மட்டுமல்ல் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான ஜனநாயக குரலாகும். அரசியல் வேறுபாடுகளையும் பிரதேச வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தமிழர்களும் அகிம்சை வழியிலும் ஒன்றிணைந்து இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
