மியன்மாரின் ராகைன் (Rakhine) மாநிலத்தில் நடத்தப்பட்ட கொடூர வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ (ASEAN) அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிலிப்பைன்ஸ் அரசு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ராகைன் மாநிலத்தில் உள்ள கியாக்டாவ் (Kyauktaw) பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்குப் பிறகு அந்தப் பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த வான்வழித் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் அழிவுகள் குறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறையின் ஆசியான் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் அனா மேரி ஹெர்னாண்டோ (Ana Marie Hernando) கவலை தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் தற்போதைய சூழ்நிலைகளை பிலிப்பைன்ஸ் கூர்ந்து கவனித்து வருவதாகவும், அமைதியை ஏற்படுத்த ஆசியான் அமைப்பிற்குள் தேவையான பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தீவிர உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இராணுவத்திற்கு எதிராக ‘அரகான் இராணுவம்’ (Arakan Army) உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்கள் போராடி வருகின்றன.
இந்த நீடித்த மோதல்களால் இதுவரை சுமார் 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
