ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வீட்டு உரிமைக்காக நடைபெற்ற பாரிய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நகரின் மத்திய பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டு வாடகை அதிகரிப்பு மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைக்காத நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சில போராட்டக்காரர்களுக்கும் கட்டலோனிய பொலிஸாரான Mossos d’Esquadra அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, சில இடங்களில் குப்பைத்தொட்டிகள் மற்றும் ஏனைய பொருட்களைப் பயன்படுத்தி தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு தீவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதுடன், சில பகுதிகளில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸ் படையினர் முன்னேறியுள்ளனர்.
இந்த மோதல்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பல இடங்களில் தீச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், வீதிப் பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்பெயினில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் வீட்டு வசதி நெருக்கடிக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பார்சலோனாவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல்களைத் தொடர்ந்து, நகர மையப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
