1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளுங்கட்சியின் 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான யோசனையை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணை, நேற்று வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர், 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை அரசாங்கம் ஏற்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை ஆராய்வதற்காகவே ஆளுங்கட்சியின் 51 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த பிரேரணையின் நோக்கத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட நீதியமைச்சர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்குப் பதிலாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
