இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 அவசர அழைப்பு இலக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலக்கத்தின் ஊடாக, போதைப்பொருள் விற்பனை, விநியோகம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்க முடியும்.
தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதுடன், கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் தேசிய செயற்பாட்டுச் சபையின் மேற்பார்வையில் இயங்குகிறது.
எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதியுடன் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாப்பது மற்றும் போதைப்பொருள் அற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
