முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நீதிமன்றப் பதிவாளர் ஒருவர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சரண குணவர்தனவுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காக, நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபா இலஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவரது மனைவி சினாரி லக்மாலி ஹெட்டியாரச்சி கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் அலுவலக உதவியாளரும், இலஞ்சம் வழங்க உதவியதாகச் சந்தேகிக்கப்படும் நீதிமன்றப் பதிவாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசியிலிருந்த வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
