இலங்கையில் வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் மற்றும் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமனங்களில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, நாட்டின் சுகாதார சேவைகள் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாருக் தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுகாதார சேவையானது கொழும்பு முதல் தொலைதூரப் பிரதேசங்கள் வரை சமமான தரத்தில் வழங்கப்படுவதற்கு, அரசியல் தலையீடுகளின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வைத்தியர்களுக்கான இடமாற்றப் பொறிமுறையே முக்கிய காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாபன விதிக்கோவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய, இடமாற்றக் குழுவினூடாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஓரங்கட்டுவதுடன், சட்டப்பூர்வமான இடமாற்றக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகளும் இடம்பெறுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகப் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும், ஆறு வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில் இருவர் மாத்திரமே சேவையில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய நிலைமை தொடருமானால், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் சுகாதார உரிமைகளும் வைத்தியர்களின் தொழில்சார் உரிமைகளும் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்காகக் காத்திருக்கும் வைத்தியர்களுக்கான நியமனங்கள் பல வருடங்களாகத் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு சுகாதார அமைச்சின் மந்தமான செயற்பாடுகளே பிரதான காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, அரசியல் தலையீடுகளின்றி வைத்தியர்களுக்கான இடமாற்றப் பொறிமுறையை உடனடியாகச் சீரமைப்பதுடன், உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமனங்களையும் துரிதமாக வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் அன்பாஸ் பாருக் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
