நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் நேற்று (20) பிற்பகல் திறக்கப்பட்டதால், லிந்துலைப் பகுதியில் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தை நோக்கிப் பாயும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டப் பகுதிகளில் ஆற்றுக்கு அருகிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையால் அம்பேவெல ரயில் நிலையம், நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதி மற்றும் ரயில் பாதை ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
