சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அபியே (Abyei) பிராந்தியத்தில் உள்ள சந்தையொன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (19) அபியே நகருக்கு வடக்கே அமைந்துள்ள அமியட் (Amiet) சந்தையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சந்தைக்கு அருகிலிருந்த எரிபொருள் களஞ்சியமும் தாக்குதலுக்கு உள்ளானதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அபியே நிர்வாகத்தின் இடைக்கால தகவல் அமைச்சர் யோஹன்னா அகோல் ந்கோர் (Yohanna Akol Ngor), உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததால், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூடான் இராணுவம் மீது குற்றச்சாட்டு
இந்தத் தாக்குதலுக்கு சூடான் இராணுவமே காரணம் என தெற்கு சூடான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டு சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சூடான் இராணுவத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், தெற்கு சூடானிலிருந்து துணை இராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படைக்கு (RSF) எரிபொருள் எடுத்துச் சென்றதாகக் கருதப்படும் வாகனங்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூடான் இராணுவத்தின் உத்தியோகபூர்வ பதில் உடனடியாக வெளியாகவில்லை.
காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை
தாக்குதலில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு அருகிலுள்ள அமெத் பெக் (Ameth Bek) மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு சூடான் அரசாங்கம், சூடான் தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளது.
தொடரும் உள்நாட்டுப் போர்
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சூடான் இராணுவத்துக்கும் விரைவு ஆதரவுப் படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. இந்த மோதல் பெரும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், அண்டை பிராந்தியங்களின் பாதுகாப்பையும் பாதித்துள்ளது.
சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் எண்ணெய் வளம் நிறைந்த அபியே பிராந்தியம், நீண்டகாலமாக அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
