ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவின் நான்காம் நாளான இன்று (22), இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தையும், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் சமன் மதுரங்க சுபசிங்க மற்றும் நீச்சல் போட்டியில் நவீத் ரஷீன் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
குண்டெறிதல் போட்டியில் 14.02 மீற்றர் தூரம் எறிந்த பாலித்த பண்டார இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது ஆசிய பரா விளையாட்டு விழாவில் அவர் வென்ற இரண்டாவது வெள்ளிப் பதக்கமாகும்.
T47 வகைப் பிரிவு ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் 50.03 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த சமன் மதுரங்க சுபசிங்க, இந்திய வீரர் ஒருவர் விதிமீறல் காரணமாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இணை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
அதேவேளை, S9 வகைப் பிரிவு ஆண்களுக்கான 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியை 1 நிமிடம் 03.29 செக்கன்களில் நிறைவு செய்த நவீத் ரஷீன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்படி, இலங்கை அணி இதுவரை மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் ஆறு பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதேவேளை, நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் நுவன் இந்திக்க 6.30 மீற்றர் தூரம் பாய்ந்து நான்காம் இடத்தைப் பெற்றார். இந்தியாவின் தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ் 7.15 மீற்றர் தூரம் பாய்ந்து ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
