அநுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்று, புராதன மற்றும் மதப் பின்னணியைப் பாதுகாத்து, அப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் புனித பூமி அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் பார்வையிட்டார்.

இதன்போது, புனித நகரத்தின் நுழைவாயில்களைப் புனரமைத்தல், பக்தர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

அத்துடன், அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தடாகங்களைச் சூழவுள்ள பகுதிகளின் வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தில் இடம்பெறும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ருவன்வெலிசாயவிற்கு அருகில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கான இடம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்குரிய பகுதிகளையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, திட்டத்தை முன்னெடுப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தினார்.

இதன்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சாயவை வழிபட்டு ஆசிபெற்ற ஜனாதிபதி, அடமஸ்தானாபதி (பதில்) மற்றும் ருவன்வெலிசாய விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

