வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறித்த காற்றழுத்த அமைப்பு இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை (25) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்கு-வடமேற்குத் திசையில் நகரும் இந்த அமைப்பு திங்கட்கிழமை காலை சூறாவளியாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

எனினும், குறித்த வானிலை அமைப்பு இலங்கைக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அதனுடன் தொடர்புடைய காற்றோட்டம் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, பாதிப்புகளைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மாறிவரும் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


