வடக்கு அந்தமான் கடற்பகுதிக்கு அருகில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, தாழமுக்கமாக வலுப்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழமுக்கம் நாளை மறுதினம் காலை வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றிரவு பலத்த மழை
மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
நாளைய தினம் மேல், சபரகமுவ, வடக்கு, வடமேல், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
10 முதல் 20 பாகை வடக்கு அட்சரேகைக்கும், 85 முதல் 95 பாகை கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
- கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ருவான்வெல்ல.
- நுவரெலியா மாவட்டம்: நோர்வூட் மற்றும் அம்பகமுவ.
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை நிலவரம் குறித்து அவதானமாக இருக்குமாறும், மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மக்கள் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
