நாட்டில் நிலவும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில், நிலைமையை ஆராய்ந்து தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாகப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்படும் பகுதிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிலவும் வானிலை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
