கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகளைத் திரிபுபடுத்தி, போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பரப்புவது அதிகரித்துள்ளதாகக் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு, தவறான தகவல்கள் இணையவழியில் பரப்பப்படுவது அதிகரித்து வருவதை அவதானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.
எனவே, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளை மாத்திரமே சரியானதும் செல்லுபடியாகக் கூடியதுமான தகவல்களாகக் கருதுமாறு பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், போலியான அல்லது திரிபுபடுத்தப்பட்ட சுற்றறிக்கைகளால் ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறான தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாகப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

