பொலிஸ் சேவையின் பல்வேறு தரநிலைகளுக்காக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை சவாலுக்கு உட்படுத்தி, பதவி உயர்வு கிடைக்கப்பெறாத, சுமார் 1050 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 40 அடிப்படை உரிமை மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் நேற்று (9) தீர்ப்பளித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய மற்றும் சம்பத் விஜேரத்ன, நீதியரசர் மஹிந்த ஆகியோர் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தனர். மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் இணக்கத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019, 2020, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில், அப்போதைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளே இந்த மனுக்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் ஆகவும், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ஆகவும், உப பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் வரை வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கு எதிராக, பதவி உயர்வு கிடைக்கப்பெறாத ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளால் இந்த 40 அடிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தீர்ப்பை அறிவித்து நீதியரசர்கள் அமர்வு தெரிவி்க்கையில், பதவி உயர்வுகளை வழங்கும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றம் திருப்தியடையக்கூடிய வகையிலான சான்றுகளையோ அல்லது தகவல்களையோ சமர்ப்பிக்க மனுதாரர்கள் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியது.
அதற்கமைய, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் பிரகாரம் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த மனுதாரர்கள் தவறிவிட்டதாகத் தெரிவித்த உயர் நீதிமன்றம், அதனடிப்படையில் இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
