‘அர்னாப்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இலங்கையின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 21,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி காலை 6 மணி வரையான காலப்பகுதியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 18 மாவட்டங்களிலுள்ள 136 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 5,768 குடும்பங்களின் 21,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகளால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக பாதிப்பு
அதிக பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக இரத்தினபுரி பதிவாகியுள்ளது. அங்கு 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களின் 10,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். 101 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இரண்டாவது அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களின் 6,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மேலும், இருவர் காணாமல் போயுள்ளனர்.
மாத்தறையில் அதிக வீடுகள் சேதம்
இதேவேளை, நாட்டிலேயே அதிகளவிலான வீடுகள் சேதமடைந்த மாவட்டமாக மாத்தறை பதிவாகியுள்ளது. அங்கு ஒரு வீடு முழுமையாகவும், மொத்தம் 113 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
