இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த எச்சரிக்கை நாளை (05) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, கேகாலை, குருணாகல், புத்தளம், மன்னார், மாத்தளை, மொனராகலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம், அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
கடும் மின்னல் தாக்கங்களினால் உட்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதுடன், வெளிப்புற நடவடிக்கைகளும் பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின்போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடையவும்.
மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்கவும்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவும்.
கம்பி இணைப்புத் தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மிதிவண்டி, உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
