இலங்கையின் முன்பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் இணைப்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக 108 தேசிய மட்ட பயிற்றுநர்களும், 556 மாகாண மட்ட பயிற்றுநர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் எட்டு மாகாணங்களில் பயிற்சித் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சபரகமுவ மாகாணத்தில் நவம்பர் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்பள்ளிகளுக்கான ஒரே மாதிரியான பாடத்திட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளைப் பதிவு செய்தல் ஆகியவையும் இத்திட்டத்தின் நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
