பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள நாடளாவிய போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த நவம்பர் 5ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 70,000 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டதுடன், தலைநகர் உட்பட பல நகரங்களில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சில பகுதிகளில் கலகத்தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.
துலூஸ் நகருக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை அதிகாலை கிடைத்த தகவல்களின்படி, பாரிஸுக்கு வெளியே நடைபெற்ற 180 போராட்டங்களில் சுமார் 270,000 பேர் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் உணவு, எரிபொருள், வீட்டு வாடகை மற்றும் மின்சாரச் செலவுகளுக்கு மத்தியில் ஊதியங்களும் ஓய்வூதியங்களும் அதற்கேற்ப அதிகரிக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், வேலைநீக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் அவை எச்சரித்துள்ளன.
இதற்கிடையில், பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கப் பிரஜைகளுக்காக அந்நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது. போராட்டங்கள் காரணமாகப் போக்குவரத்து பாதிப்புகள், திடீர் கட்டுப்பாடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்பதால், போராட்டப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் தொடரும் இந்தப் போராட்டங்கள் காரணமாக பொதுப் போக்குவரத்து, கல்வி மற்றும் அன்றாடச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
