சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜான் பாடசாலை அருகிலுள்ள வீதிகளில் தலைக்கவசம் இன்றி மற்றும் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 31ஆம் திகதி மாலை, தனியார் வகுப்புகளுக்குச் சென்றுகொண்டிருந்த மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் சிலர் ஆபத்தான முறையில் பயணித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
காணொளி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 19 முதல் 21 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள் கடந்த மூன்று நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
