செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆய்வகத்தில் செயல்படக்கூடிய புதிய வைரஸ்களை முதன்முறையாக உருவாக்கியுள்ளதாக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், தாவரங்கள் மற்றும் மனிதர்களின் மரபணு வரிசைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட AI மாதிரிகளை பயன்படுத்தி, மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாத பாக்டீரியாவைத் தாக்கும் 16 புதிய பாக்டீரியோஃபேஜ் வைரஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு Science அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு கொண்ட பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறைகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஆபத்தான வைரஸ்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆபத்துகளை குறைக்கும் வகையில், மனிதர்களைத் தாக்கும் வைரஸ்கள் தொடர்பான தரவுகளை AI பயிற்சியில் பயன்படுத்தவில்லை என்றும், பாதுகாப்பான ஆய்வக சூழலில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
