வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கும், உள்நாட்டில் பணி நிமித்தம் இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் தத்தமது பணியிடங்களிலேயே வாக்களிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும். அத்துடன், தகுதியற்ற நபர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவது தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனை விடவும் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் சட்ட மறுசீரமைப்புகள் பல உள்ளன. குறிப்பாக, தேர்தல் தினத்தில் பல்வேறு தொழில்சார் கடமைகள் காரணமாகத் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாத உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களிலேயே வாக்களிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பாமல், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்தே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்றதொரு சட்ட நடைமுறையைத் தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம். இதன் மூலம் தேர்தல் தினத்திற்கு முன்னரோ அல்லது தேர்தல் தினத்தன்றோ, அவர்கள் பணிபுரியும் இடத்திலிருந்தே வாக்குகளைப் பதிவு செய்ய வழிவகை செய்ய முடியும்.
அதேபோன்று, தகுதியற்ற நபர்கள் மக்கள் பிரதிநிதிகளாக உயர் சபைகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்புகளும் அவசியமாகும். இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி, அவசியமான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவை தற்போதைய சூழலில் மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாகும்.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பலமுறை கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. கொள்கை ரீதியாக இந்த முன்மொழிவு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அந்த ஆலோசனைகளின் போது கண்டறியப்பட்டது.
