இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிரப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடு தழுவிய ரீதியில் இன்று (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
அரச பல்கலைக்கழகங்களில் தகுதியான விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மிகக் கடுமையாக நிலவுவதுடன், உள்ள விரிவுரையாளர்களும் அமைப்பை விட்டு வெளியேறிச் செல்லும் சூழல் நிலவுகிறது. இதனால் 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்குள் இணைத்துக்கொள்வதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன.
மேலும், பல்கலைக்கழக ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் மிகவும் பழமையானவையாகக் காணப்படுவதோடு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கோ அல்லது நவீனமயமாக்குவதற்கோ போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களின் கல்வியின் தரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அண்மையில், நாட்டில் 50 புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு இது நல்ல யோசனை என்ற போதிலும், நடைமுறையில் இது சாத்தியமற்ற ஒன்று. தற்போதுள்ள 17 அரச பல்கலைக்கழகங்களிலேயே புதிய பீடங்களையோ அல்லது திணைக்களங்களையோ திறக்க முடியாத அளவுக்குப் பணப்பற்றாக்குறையும் விரிவுரையாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது.
தற்போது இருக்கும் பல்கலைக்கழகங்களின் தரம் மற்றும் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கத் தவறிவிட்டு, புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது சாத்தியமில்லை.
ஏற்கனவே கடந்த வாரம் மதிய உணவு இடைவேளையின் போது விரிவுரையாளர்கள் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இருப்பினும் அரசாங்க தரப்பில் இருந்து இதுவரை நிலையான தீர்வு எதுவும் கிடைக்காத காரணத்தால், நாளை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தொடர்ந்து இந்தப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
