மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தேரரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இனிமேல் எந்தவொரு அரச திணைக்களங்களுக்கும் சென்று இதுபோன்று அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது.
இவ்வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவானவர்களைக் கைது செய்யப் பொலிசாருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறும் பட்சத்தில், பிணை இரத்து செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு சென்ட்ரல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க அலுவலகத்திற்குள் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேலும் நான்கு பேருடன் அத்துமீறி நுழைந்து, அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகப் பாதிக்கப்பட்ட அதிகாரிகளால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ( 7) வாக்குமூலம் வழங்குவதற்காகப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தேரர், மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினத்தில் தேரருடன் சென்று தலைமறைவாகியிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் அடுத்த விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.