இலங்கையில் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘ஃபில்கிராஸ்டிம்’ எனும் தடுப்பூசி மருந்து இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து இன்று (14) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,”சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புற்றுநோய் மருந்துத் தொகுதியில், ஒவ்வொரு தடுப்பூசி ஊசியிலும் உரிய லேபிள்கள் இல்லாதது கண்டறியப்பட்டதால், நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அந்தத் தொகுதியை நிராகரித்து சீனாவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இதனால் அரசாங்கத்துக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படாது, மாற்று மருந்துகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு உள்ளூர் சந்தையில் தரமான மருந்துகளை அவசரமாக கொள்வனவு செய்ய அதிகாரமும் நிதியும் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை வெளிவிவகார அமைச்சராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் அமைச்சரவை மாற்றத்துக்கான எந்தத் தேவையும் இல்லை என்றும், அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
