அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று (மே 06) 324 ரூபாய் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் பெறுமதி இந்தளவுக்கு வீழ்ச்சியடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இது நாட்டின் பலவீனமான வெளிநாட்டு இருப்பு மற்றும் கடன் சுமை தொடர்பில் புதிய கவலைகளைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.40 ரூபாயாகவும், விற்பனை விலை 324.03 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.
உலக சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.
பொருளாதார நிபுணர் கலாநிதி கெனத் டி சில்வா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ரூபாயின் இந்த வீழ்ச்சியானது இலங்கையின் நிகர சர்வதேச முதலீட்டு நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
